புதன், 16 ஏப்ரல், 2014

வீரவநல்லூர் சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு துவக்க வலியுறுத்தல்

வீரவநல்லூர்:வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறந்த மருத்துவ பிரிவு துவங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 40 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுற்றுப் பகுதி கிராம மக்கள் மருத்துவ வசதிபெற வீரவநல்லூர் வரவேண்டும். மேலும் தீவிர சிகிச்சைக்கு வீரவநல்லூர் வந்து மற்ற ஊர்களுக்கு செல்லவேண்டும்.வீரவநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு அலோபதி சிகிச்சை செய்யப்படுகிறது.
ஆனால் தீராத நாள்பட்ட வியாதிகள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் சித்த வைத்தியத்தில் குணமாகிறது என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

சித்த வைத்தியத்தை முன்பை விட அதிகமாக மக்கள் விரும்புகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் மூலம் சித்த வைத்தியம் மேலும் பிரபலமடைந்துள்ளது.ஆனால் வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த வைத்திய பிரிவு இல்லை. அதனால் சித்த வைத்தியத்தை விரும்புபவர்கள் சேரன்மகாதேவி, அம்பை மற்றும் இதர ஊர்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சித்த வைத்தியப்பிரிவு இயங்குவதால் இப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று சித்த மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.நீண்ட தூரம் சென்று சித்த வைத்தியம் பெற கஷ்டபடுகின்றனர். ஆகையால் வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த வைத்தியப்பிரிவு துவங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென வீரவநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: www.dinamalar.com